மரணத்தை எதிர்கொள்ளல் – 3

மரணம் என்ற பொருள், விவாதத்திலிருந்து விலக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.  குறிப்பாக சில பெண்களுக்கு முன்னால் நீங்கள் மரணத்தைப் பற்றி பேசினால் அவர்கள் உங்கள் வாய்மேல் கையை வைத்து, ‘மரணத்தைப் பற்றி பேசாதீர்கள், வேறு ஏதாவது நல்ல விஷயத்தைப் பற்றி பேசுங்கள்’ என்று சொல்கிறார்கள்.  இதே நபர்களே அடிக்கடி ஒருவனின் மரணத்துக்கு மிகச் சிறந்த காரணகர்த்தாக்களாகவும் இருக்கிறார்கள்.   அண்மையில், இறந்துகொண்டிருந்த ஒருவரின் பக்கத்தில் இருந்தேன்.  அவருடைய மாமியார் பக்கத்தில் உட்கார்ந்து கடவுள், சொர்க்கம், மற்றும் மரணத்துக்குப்பின் ஆன்மாவுக்கு என்ன நடக்கும்? போன்றவற்றைப் பற்றியெல்லாம் பகவத் கீதையிலிருந்து, படித்துக் காட்டிக்கொண்டிருந்தார்.  பிறகு அந்தப் பெண்மணி அவரைப் பார்த்துவிட்டு, தான் தொடர்ந்து படிக்கவேண்டுமா என்பதை உறுதி செய்து கொள்ள மெதுவாகத் தன்னுடைய விரலை, அவருடைய மூக்கருகே வைத்துப் பார்த்தார்.  இது ஒரு பெரிய முரண்பாடு.  ஒருவர் எப்போதும் வாழ வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்; அப்புறம், அவர் உடனடியாக இறக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.  குறிப்பாக, நவீன மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அறை வாடகைகளை மனதில் கொண்டால், ஒருவர் உயிர் வாழ இனி வாய்ப்பே இல்லையென்று தெரிந்துவிட்டால், அவர் உயிருடன் இருப்பதை பெரும்பான்மையோர் விரும்புவதில்லை.  இது ஒரு முரண்பாடு.  நீங்கள் மிக அதிகமாக நேசிக்கும் நபர் இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்; நீங்கள் மிக அதிகமாக நேசிக்கும் நபர் எப்போதும் இறக்காமல் நித்தியமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள்.

அண்மையில் திருவனந்தபுரத்தில் என்னுடைய அறுபதாவது பிறந்த நாள் விழா நடந்தது.  சிலர், “அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாழட்டும்” என்றும், வேறு சிலர் “அறுபது என்பது பாதி வழிதான்.  அவர் 120 ஆண்டுகள் வாழட்டும்” என்றும் சொன்னார்கள்.  நான் நினைத்தேன், ‘சரி, நாளையே நான் நடமாடமுடியாமல்  படுக்கையில் விழுந்து படுக்கையிலேயே மலம் கழித்தால், நான் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமென்று  இப்போது வாழ்த்தும் இந்த நபர் என்னை சுத்தம் செய்து, உடைமாற்றி, படுக்கை விரிப்பையும் வெளுத்துத் தருவாரா?’  எனக்கு நம்பிக்கை இல்லை.

என்னுடைய மரணத்தைப் பற்றி நானே சொல்ல விரும்பும் சில விஷயங்கள் உள்ளன.  வாழ்க்கை இப்போது மகிழ்ச்சிகரமாக இல்லையென்பது ஒரு கட்டத்தில் தெரிந்துவிட்டால், இந்த உடலில் தொடர்ந்து இருப்பது தேவையற்றது என்று எனக்குத் தோன்றுகிறது.  இரண்டு, உபநிஷத்துக்களில், ‘ஒரு நபர், ஆணோ-பெண்ணோ, தான் கடவுளோடு ஒன்றிணைந்துவிட்டோம்,  இந்தப் புலன்கள் சார்ந்த இருப்பு ஒரு சுவையற்ற செயல் என்பதை உணர்ந்துவிட்டால், ஒன்று அவர் இந்த வாழ்க்கையை விளையாட்டாக வாழ்ந்துபார்க்கலாம் அல்லது முடித்துக் கொள்ளலாம்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒரு முறை நான் ரிஷிகேஷில் இருந்தபோது, ஒரு சன்னியாசி ஏறத்தாழ 150 பேருக்கு ஒரு விருந்தளித்தார்.  நாங்கள் கங்கையின் கரையில் உட்கார்ந்துகொண்டு மிக அருமையான பகல் விருந்தை சுவைத்துக் கொண்டிருந்தோம்.  இனிப்புகள் விநியோகிக்கப்பட்ட பிறகு, ஒருவர் வந்து எல்லோருடைய காலையும் தொட்டு வணங்கினார்.  பிறகு, வழிபட்டுவிட்டு, எந்தப் பதற்றமும் இன்றி, சீறும் நீரோட்டத்துக்குள் குதித்தார்.  கலவரப்பட்ட நான் “யாராவது அவரைக் காப்பாற்றுங்களேன்” என்று கத்தினேன்.  ஆனால், மற்ற எல்லோரும் கைகளைக் கூப்பி அதே அமைதியுடன் அவருக்கு வழிபாட்டுடன் கூடிய விடை கொடுத்தார்கள்.  எல்லோருக்கும் மன நிறைவு உண்டாயிற்று.  நீருக்குள் குதித்தவருக்கு எந்தக் கவலையோ, நோயோ கிடையாது.  வாழ்க்கையில் நிறைவை அடைந்துவிட்டதாக உணர்ந்து அவர் போய்விடலாம் என்று நினைத்திருக்கிறார், அவ்வளவுதான்.  அந்த சமயத்தில் அது எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது; ஆனால், இப்போது அப்படியில்லை, அது ஒரு நல்ல வழி என்று நான் நினைக்கிறேன்.

‘வாழ்வதா, சாவதா என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு நபருக்கும் உரிமை உண்டு’ என்று நான் கருதுகிறேன்.  தற்கொலை குறித்து உண்டாக்கப்படும் இந்தப் பெரிய வெற்று அமளிக்குக் காரணம், மக்கள் தங்களுடைய சொந்த மரணத்தைப் பற்றி கொண்டிருக்கும் பயங்கள்தான்.  தற்கொலை பற்றிய கூட்டுக் கருத்தாக்கத்தை மரணத்தைப் பற்றிய மனோவியல் பயம் உருமாற்றியிருக்கிறது.  ‘ஒருவன் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பினால் அதை அனுமதிப்பது சரி’ என்று கருதுகிறேன்.  மற்றவர்கள் அவனை தடுத்து நிறுத்த முயலவேண்டியதில்லை.  சில சமயங்களில் ஒரு நபர் என்னிடம் வந்து தற்கொலை செய்துகொள்ளும் தன்னுடைய ஆசையை வெளியிட்டால், ‘அழகான எண்ணம்’ என்றுகூட நான் சொல்லக்கூடும்.  அதே சமயம் ஒரு தவறான கருத்து அவர்களை இந்த எண்ணத்துக்கு இட்டுச் சென்றிருந்தால், அந்தத் தவறை சரிசெய்ய நான் முயல்வேன்.  ஆனால், அவர்கள் அதை ஓர் அழகான செயலாகச் செய்ய விரும்பினால், அவர்கள் அதைச் செய்யும்படி விட்டுவிடுவேன்.

ஒருமுறை ஒருவன் வந்து, தான் தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாக என்னிடம் சொன்னான்.  அவனுக்குப் பொருத்தமான ஒரு தற்கொலை முறையைத் தேர்ந்தெடுக்க என்னுடைய உதவியை நாடினான்.  ‘தூக்கு மாட்டிக் கொள்வது கோரமானது’ என்று சொன்னேன்.  அவன் ஒத்துக்கொண்டான்.  ‘விஷம் சாப்பிட்டால், முகம் நீலநிறமாகி உருக்குலைந்து விடுகிறது’ என்று சொன்னேன்; அவன் ஒத்துக்கொண்டான்.  ஓடும் ரயிலுக்கு முன்னால் பாய்வது நல்லதுதான், ஆனால் தப்பு எதுவும் நடந்துவிட்டால், வெறும் கைகால் மட்டும் துண்டிக்கப்பட்டுவிடும்.  சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் நடப்பதுதான் மிகச் சிறந்த வழி என்று நாங்கள் தீர்மானித்தோம்.  அங்கே, ‘காதலர் பூங்கா’ என்று ஓர் இடம் உண்டு.  இந்த இடத்தில் நிறைய நல்ல உணர்வுகள் உள்ளன.  பாதி தேய்பிறை நடு இரவில், திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.  அந்த நேரத்தில் அலைகள் வெள்ளி முகடுகளோடு இருக்கும்.  கடலில் நுழைந்து பெரும் பரப்போடு இணைந்து கொள்ள அது சரியான தருணம் என்று முடிவு செய்தோம்.  அங்கு நாங்கள் போனோம்; 11 மணிக்கு ஒரு போலீஸ்காரன் நாங்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று எங்களைக் கேட்டன்.  சமஸ்கிருத செய்யுள்களை நான் ஒப்பிக்க ஆரம்பித்தேன்.  வெகுவாகக் கவரப்பட்ட அவன் போய்விட்டான்.  12 மணிக்கு, ‘இதுதான் அருமையான நேரம்’ என்று சொன்னேன்.  நான் அவனுடன் தண்ணீருக்குள் இறங்கினேன்.  கடைசி தழுவலுக்காக அவன் என்னை அணைத்தான்.  நான் சொன்னேன், “முட்டாளே, இந்த சமுத்திரம் நாளையும் இங்கு இருக்கும்.  உனக்கு ஏதாவது அதிர்ஷ்டம் நிகழலாம்.  நாளைய அதிர்ஷ்டத்துக்காக, நீ போய் ஏன் காத்திருக்கக் கூடாது?  இன்றைக்கே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டால், நாளைக்கு அதற்குத் திரும்பிப் போக உனக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.” ஒத்துக்கொண்ட அவன் என்னுடன் வந்தான்.  அடுத்த நாள் ஊட்டிக்குப் போகும் ரயிலில் ஏற்றி அவனை அனுப்பினேன்; அங்கு அவன் மகிழ்ச்சியாக இருந்தான்.  சிலரிடம், ‘சரி நல்லது’, என்று நாம் சொல்ல வேண்டும், மற்றவரை நாம் அறிவுரை கூறி மனம் மாற்ற வேண்டும்.  பொதுவாகச் சொன்னால், அது நல்ல விஷயம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.  ஒருவருக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் யாரும் எதுவும் செய்ய முடியாது.

Leave a comment