நேர்காணல் – 10

22.6.1996

நான் ஒரு கதை போல சொல்வதுண்டு.  ஒருமுறை பஞ்சாபில் இருந்து ஒரு தோட்டக்கலை நிபுணர் இங்கு வந்தார்.  மிக அபூர்வமான சில மலர்ச் செடிகளின் விதைகளை எனக்குத் தந்தார்.  அன்றே அவருடன் நான் கோவை போக வேண்டியிருந்தது.  எனவே அவற்றைத் தொட்டியில் விதைத்து நீரூற்றிவிட்டு, அப்போது தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவை போனேன்.  பத்துநாள் கழித்து திரும்பி வந்தால் தொட்டிகளில் வெண்டைச் செடிகள்தான் இருந்தன.  என்ன நடந்தது என்று விசாரித்தேன்.  தோட்டக்காரர் நீரூற்றப்பட்டு தயாராக இருந்த தொட்டிகளைப் பார்த்தாராம்.  எதற்கு காலியாக இருக்க வேண்டும் என்று வெண்டை விதைகளை அதில் போட்டிருக்கிறார்.  மூன்றாம் நாள் முளைத்த ‘களைகளை’யெல்லாம் பிடுங்கி வீசிவிட்டார்; அவ்வளவுதான்.  நமது கல்விமுறைக்கு இதை நான் உதாரணமாகக் காட்டுவதுண்டு.  காளிதாசனும் கம்பனும் ஆக வேண்டிய குழந்தைகளை நாம் டாக்டரும் எஞ்சினியருமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் மதநம்பிக்கையாளரா?

இல்லை.  மதத்தை நான் நம்பவுமில்லை.  ஏற்கவுமில்லை.  மதம் மனிதனை நம்பிக்கையுள்ளவன், நம்பிக்கையற்றவன் என்று இரு பெரும் பகுதிகளாக முற்றாகப் பிரித்து அதனடிப்படையில் இயங்குகிறது.  அப்பிரிவினை அத்தனை எளிதல்ல.  நேற்றைய ஆன்மீக அடிப்படைகள் சிலவற்றைக் குறியீடுகளாகப் பயன்படுத்தி இன்று அதிகார மையங்களை உருவாக்குவதே மதம்.  பெரியார் மதமெனும் நிறுவனத்தை எதிர்த்தது எனக்கு உடன்பாடான விஷயமே.  இங்கு மத நிறுவனங்களின் பிடியிலிருந்து மனிதர்களை விடுவிப்பது மிக அவசியமான ஒரு பணியாகும்.

ஆனால் கீதைக்கும் உபநிடதங்களுக்கும் நீங்கள் உரை எழுதியுள்ளீர்கள்…

இப்புராதன நூல்களை மத நூல்கள் என்று யார் சொன்னது?  எந்த உபநிடதம் நம்பிக்கையை ஸ்தாபிக்கிறது?  கீதை மத நூல் அல்ல, தத்துவ நூல் என்பதே நானும் நடராஜ குருவும் எழுதிய கீதை உரைகளின் சாரம்.  வேதம் என்பது ஓர் எல்லை வரை மத நூல்.  நம்பிக்கையை அது வலியுறுத்துகிறது.  கீதை என்ன சொல்கிறது?  மூன்று குணங்களுடன் நிற்கும் வேதங்களை நீ வேரோடு வெட்டித்தள்ளு என்கிறது.

கீதை இந்து மதத்தின் பிரதான நூல் அல்லவா?

இந்துமதம் என்ற சொல் அவ்வளவு பொருத்தமானதல்ல.  கீதை இந்தியச் சிந்தனை மரபின் மூல நூல்களில் ஒன்று.  நமது மரபு பற்றிய அறியாமையை நமது அறிவுஜீவிகள் வளர்த்துக் கொண்டுள்ளனர்.  இதில் அவர்களுக்கு வெட்கம் இல்லை.  தன் மரபு பற்றிய ஞானம் இல்லாத மேற்கத்தியச் சிந்தனையாளர்கள் யாருமில்லை.  மேற்கத்தியக் கருத்துக்களை சூட்டோடுசூடாக அறிந்து இங்கு அதைப்பற்றிப் பேச விரும்புகிறவர்கள்,  அவர்கள் விஷயங்களை அறிந்து வைத்திருக்கும் முறையையும் ஆராயும் முறையையும் ஏன் சிறிதாவது கற்றுக்கொள்ளக் கூடாது?

நமது மரபு முழுக்க ‘இந்து மத’ சார்பானது என்பது ராதாகிருஷ்ணன் போன்றோர் செய்த புரட்டு.  அதை மதவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  அதைப் பெருவாரியானோர் நம்பும்படிச் செய்வதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.  அவர்களை எதிப்பவர்கள்கூட அதை நம்புகின்றனர்.  உண்மையில் நமது மரபு மிகவும் சிக்கலானது.  பல்வேறுபட்ட உள்ளோட்டங்களும் முரண்களும் உள்ளது.  மாறுபடும் பல்வேறு கருத்து நிலைகள் பின்னி முயங்கி உருவானது.  அதை ஒற்றைப் படையாக ஆக்குவது அதை மறுப்பதற்குச் சமம்தான்.  வேதமரபுக்கு எதிரான பேரியக்கம் உபநிடதங்கள்.  தத்துவத்தின் வெற்றியை அவை பறைசாற்றுகின்றன.  பெளத்தம் இவ்விரு மரபுகளுக்கும் எதிரானது.  அத்வைதம் இவையனைத்தையும் மறுப்பது.  அதே சமயம் இவை ஒன்றிலிருந்து இன்னொன்றாக முளைத்தெழுந்தவையும்கூட.  சமரசங்களும் போராட்டங்களும்தான் இவற்றை வளர்த்தெடுத்தன.  பொதுமைப்படுத்தாமல் இவற்றின் உள்ளிழைகளை அறிந்து வகைப்படுத்தி உள்வாங்கிக் கொள்வதே இன்றைய அறிவுஜீவிகளும் ஆன்மீகவாதிகளும் அவசியமாகச் செய்யவேண்டிய விஷயம்.  இதுவே நமது காலகட்டத்தின் பெரிய சவால்.  உண்மையில் வேதங்களுக்கு உள்ளேயே கூட சாம வேதமும் அதர்வ வேதமும் முதலிரு வேதங்களுக்கு எதிரான பல அம்சங்களைக் கொண்டுள்ளன.  அவற்றைத் தெளிவுபடுத்தும் பொருட்டு நான் சாம வேதத்திற்கு உரை ஒன்று எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

மதவாதிகள் உள்முரண்களை மறுப்பதும் அதையே அரசியல்வாதிகளும் செய்வதும் ஆன்மீகத்தில் உள்ள தேடலை மறுப்பதற்காகவே.  தேடல் எப்போதும் தன்னை விடுவித்தபடியே முன்னகரும்.  அது உறைந்து குறியீடாக ஆகும்போதுதான் அமைப்பும் அதிகாரமும் சாத்தியம்.  நான் ரமண மகரிஷியுடன் சில வருடங்கள் இருந்தேன்.  சற்றும் மதவுணர்வற்ற மனிதர் அவர் (the most irreligious man).  அவரை எவ்வகையிலும் அடையாளப்படுத்த முடியாது.  அவரைத்தேடி மக்கள் வர ஆரம்பித்ததும் அவருடைய தம்பி அவர் இருந்த பகுதியைச் சுற்றி வேலி கட்டி அதை ஓர் ஆசிரமமாக மாற்ற முயன்றார்.  ரமணர் வேலியைத் தாண்டி வெளியே போய் அமர்ந்தார்.  வேலி அங்கும் தொடர்ந்தது.  ரமணர் இறந்ததும் அவருக்கு சிலை வைத்து, ஆசிரமம் கட்டி, நிர்வாகிகளைத் தேர்வு செய்து, நிதி சேர்த்து பெரிய அமைப்பாக மாற்றிவிட்டார்கள்.

வர்க்கலையில் நாராயண குருவின் சமாதியைப் பார்க்கச் சென்றிருக்கிறேன்.  இளம் துறவிகள் பலர் வந்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யும்படி வற்புறுத்தியபடியே இருந்தனர்.

ஆம்.  சர்க்கரைப் பொங்கல்.  (புன்னகையுடன் யதி தனக்குத் தானே ஏதோ சொல்கிறார்)  அதனருகே நடராஜ குரு சமாதியான இடம் இருக்கிறது.  மிகப்பெரிய நூலகமும் ஆய்வு நிறுவனமும் உள்ளன.   அங்கு நூறில் ஒரு பங்கு மக்கள் கூட வருவதில்லை.

சிந்தனையை நிறுவனமாக்குவதெல்லாம் மதமா?

ஆம்.  உலகம் துக்கமயம் என்று புத்தர் சொன்னார்.  காணிக்கை கொடுங்கள், துக்கத்தைத் தீர்க்கிறோம் என்றனர் பிட்சுக்கள்.   யேசு உலகம் பாவமயம் என்றார்.  பாவமன்னிப்பு அட்டை வாங்குங்கள் என்று கூறியது வாடிகன்.  எல்லாம் மாயை என்றது ‘இந்து மதம்’.  குருவாயூரப்பனுக்கு எடைக்கு எடை வாழைப்பழம் தரச்சொன்னார்கள் பட்டர்கள்.  ஒரு அத்வைதியின் தலைவழியாக தங்கக் காசுகளைக் கொட்டுகிறார்கள் பிற அத்வைதிகள்.  உயிரோடு ஒரு நினைவுச் சின்னமாக ஆக வேண்டியிருக்கும் கொடுமை…

அரசியலுக்கு இது பொருந்துமா?

மார்க்ஸியம் என்பது மதமன்றி வேறு என்ன?  மூல நூல்களிலும் ஸ்தாபகர்களிலும் மிதமிஞ்சிய நம்பிக்கை, அவற்றுக்கு உரைகள்… அவர்களுக்குச் சிலைகள்… குழுச் சண்டைகள்… சமஸ்கிருதத்தில் மதம் என்றால் ‘உறுதியான தரப்பு’ என்று பொருள்.  தேடல் இருக்குமிடத்தில் ஏது உறுதி?

தியானம் எப்படி ஓர் அறிதல் முறை ஆகிறது?

பெர்க்ஸனின் ஓர் உருவகக் கதை உண்டு.  நதி ஒரே திசையில்தான் நகரமுடியும்.  நதிப்படகு இரு திசைகளிலும் நகரும்.  நதி மீன் நான்கு திசைகளில் நகரமுடியும்.  அதைப் பிடிக்கும் பறவை ஐந்து திசைகளில் நகரலாம்.  ஆனால் கரையோரமாக அமர்ந்து இவையெல்லாவற்றையும் பார்க்கும் ஒருவனின் மனம் எல்லா திசைகளிலும் நகரக்கூடும்.  நமது மனம், அதன் அன்றாட தளத்தில் உடலின் தருக்கங்களுக்கு கட்டுப்பட்டது.  ஆகவே அனைத்துத் தருக்கங்களும் உடலின் தருக்கங்களே.  உடலோ கால இடத்தில் உள்ளது.  ஆகவே மனதின் ஆழத்தை நாம் உற்றுப் பார்க்கிறோம்.  அதுவே தியானம்.

எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது.  அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும்.  சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம் பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.

தேவைகள் நிறைவேறும்வரை மனிதன் அமைதியிழந்திருக்கிறான்.  வேறெந்த உயிருக்கும் தேவையென்று தோன்றாதவைகூட அவனுக்குத் தேவை என்று படுகின்றன.  அதற்காக பிற அனைத்தையும் துறக்கவும் அவன் தயாராக உள்ளான்.  அந்த அனுபவத்தை அவன் திரும்பிப் பார்க்கும்போது இழப்புகளே அதை மேலும் அர்த்தமுள்ளதாக்குகின்றன.  மனிதன் ஒரு சவால்.  அவன் அவனுக்கு விடுக்கும் சவால்.

மனிதனை எப்போதும் ஆங்காரம் கொள்ளச் செய்வது ஒன்று உண்டு.  தனது முகமூடியோ அல்லது இன்னொருவரின் முகமூடியோ உண்மையை மறைக்கிறது என்று அவன் அறிவதுதான் அது.  அவனுள் ஏதோ ஒன்று அதைக்கண்டு கூசிப்போகிறது.  உபநிடத ரிஷி கூறியதுபோல அவன் தனக்குத்தானே கூறுவான், ‘உண்மையை மட்டுமே அறிய வேண்டுமென்று காத்து நிற்பவனுக்காக உனது போலித்தனத்தை கழட்டி வீசு.  உன்னுடையதும் என்னுடையதுமான உண்மையை அனைவரும் எப்போதும் அறிந்து கொள்ளட்டும்.’

இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் பெயர் சூட்டியிருக்கிறோம்.  இலக்கணம் வகுத்துவிட்டிருக்கிறோம்.  நாமோ இன்னும் கவனிக்கப் படாதவர்களாகவே இருக்கிறோம்.  அடர்ந்த காட்டில் இலைப் புதர்களுக்குள் இதுவரை மனிதக்கண் படாது எஞ்சும் மலர்கள் நாம்.

***

யதி மலைச்சரிவின் விளிம்பில் நின்றார்.  அஸ்தமனம் தொடங்கி விட்டது.  பறவைகள் தூரத்து குட்டை மரங்களுக்குச் சென்றுவிட்டிருந்தன.  வினோதமான ஒரு ரீங்காரம் அறுபடாது ஒலித்துக் கொண்டிருந்தது.

யதி மெளனமாக  நடந்தார்.  சில்வர் ஓக் மரங்களின் முகடுகள் மட்டுமே ஒளி பெற்றிருந்தன.  சைப்ரஸ் மரங்கள் மெலிதாகச் சீறிக்கொண்டிருந்தன.  குருகுல முகப்பிற்கு வந்ததும் யதியிடம் விடைபெற்றுக்கொண்டோம்.

குறிப்பு:

இவ்வுரையாடல்கள் பல அமர்வுகளில் பதிவு செய்யப்பட்டவை.  சில சமயங்களில் உரையாடல் முடிந்த உடனே நோட்டுப் புத்தகத்தில் குறிக்கப்பட்டன.  உரையாடல் முழுமையுறாது முறிந்துபோய்விட்ட சில சந்தர்ப்பங்களில் யதியின் நூல்களிலிருந்து சில வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன.  உரையாடல்கள் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் நடைபெற்றன.  பக்க அளவு கருதி சில கேள்வி பதில்கள் விடப்பட்டுள்ளன.  சில சுருக்கப்பட்டுள்ளன.

(1995-96-இல் ஜெயமோகன், ஆர்.குப்புசாமி, சூத்ரதாரி ஆகியோர் பதிவு செய்த நித்ய சைதன்ய யதியுடனான நேர்காணல்)

–    ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து

Leave a comment